ஆதியும் அந்தமும் - 18 - மறை சொல்லும் மகிமைகள்

வேதங்கள் நான்கு, அதன் அங்கங்கள் ஆறு, மீமாம்ஸா என இந்தப் பதினொன்று வித்யாக்கள் தவிர்த்து, `நியாயம்' என்று ஒரு வித்யா இருக்கிறது.


வித்யா' என்றால் அறிவு என்று அர்த்தம். இது பொது அறிவு. ஆனால், வேதங்கள் சொல்வது பேரறிவு. வித்யாஸ்தானத்தில் முதலாவதாக இருப்பது வேதம். வேதத்தின் கருத்துகளை எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் விளக்குவதற்காக ஆறு அங்கங்கள் ஏற்பட்டன.


அவற்றுக்கு 'வேதாங்கம்' என்று பெயர். சிக்ஷா, வியாகரணம், சந்தஸ், ஜோதிஷம், நிருக்தம், கல்பம் என்பவையே அவை. வேதத்தை நான்காகப் பகுத்திருக்கிறார்கள். ரிக், யஜுர், சாம, அதர்வ என்று நான்கு வேதங்கள் உள்ளன. நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் சேர்ந்து மொத்தம் பத்து ஆயிற்று.


இவை தவிர்த்து `மீமாம்ஸம்' என்று ஒரு சாஸ்திரம் இருக்கிறது. அது ஒரு வித்யா. அது என்ன செய்யும் தெரியுமோ? வேதத்தில் இருக்கிற கருத்தை உரிய ஆதாரங்களுடன் சொல்லி, அதனுடைய கருத்து இதுதான் என்று நிர்ணயித்துச் சொல்வதுதான் மீமாம்ஸம்.


வேதத்தின் அங்கமான `வியாகரணம்' என்பது சொல்லுக்கு இலக்கணம் சொல்வது. `சந்தஸ்' என்பது வேத மந்திரங்கள் அல்லது ஒரு செய்யுளின் ஒலி வடிவம் சீராக இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை விளக்குவது. `நிருக்தம்' என்பது ஒரு தனிச் சொல்லுக்கு விசேஷமான அர்த்தத்தை வெளிப்படுத்துவது. `ஜோதிஷம்' என்பது அஸ்ட்ரானமி பற்றிய தகவல்களைத் தருவது. `கல்பம்' என்பது இவற்றையெல்லாம் எப்படிச் செயல்படுத்துவது... அதாவது பிராக்டிகல் என்பதை விளக்குவதாகும்.


வேதங்கள் நான்கு, அதன் அங்கங்கள் ஆறு, மீமாம்ஸா என இந்தப் பதினொன்று வித்யாக்கள் தவிர்த்து, `நியாயம்' என்று ஒரு வித்யா இருக்கிறது. இதுதான் சரி, இதுதான் நியாயம் என்பதைத் தெளிவு படுத்துவது. புராணம் - பதினெட்டு புராணங்கள், பதினெட்டு உப புராணங்கள், பதினெட்டு உபோஉப புராணங்கள் என்று மூன்று பதினெட்டு புராணங்கள் உள்ளன.